தமிழ் News

புதிய தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன்

சென்னை, டிசம்பர் 29: தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக ஷீலா பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமைச் செயலாளராக உள்ள தேவேந்திரநாத் சாரங்கி, வரும் திங்கள்கிழமை ஓய்வு பெறுகிறார். அன்றைய தினமே தலைமைச் செயலாளர் பொறுப்புகளை ஷீலா பாலகிருஷ்ணன் ஏற்கவுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி வெள்ளிக்கிழமை பிற்பகல் வெளியிட்டார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயலாளராக உள்ள அவர், வரும் திங்கள்கிழமை (டிசம்பர் 31) தலைமைச் செயலாளர் பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறார்.

தமிழக அரசின் 41-வது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஷீலா பாலகிருஷ்ணன், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். 1976-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பிரிவைச் சேர்ந்த அவர், 1978-ம் ஆண்டு உதவி ஆட்சியராக தனது பணியைத் தொடங்கினார். வேளாண்மை மற்றும் உள்துறைகளின் சார்புச் செயலாளர், சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை ஆகியவற்றின் துணைச் செயலாளர் பொறுப்பையும் வகித்தார்.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை செயலாளராக இருந்தார். இதன்பின், 2002-ம் ஆண்டு முதல் முதல்வரின் செயலாளராக பணியாற்றினார்.

2007-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையில், சென்னையில் உள்ள அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றினார்.

புதிய தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், 2014-ம் ஆண்டு மார்ச்சில் தனது ஐ.ஏ.எஸ். பணியை நிறைவு செய்கிறார். அதாவது, 15 மாதங்கள் வரையில் அவர் தலைமைச் செயலாளர் பொறுப்பை  வகிப்பார். புதிய தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனின் கணவர் பாலகிருஷ்ணனும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாவார்.

தமிழக அரசில் மூன்றாவது பெண் தலைமைச் செயலாளராக ஷீலா பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் 2002-ம் ஆண்டு டிசம்பரில் முதல் பெண் தலைமைச் செயலாளராக லட்சுமி பிரானேஷ் நியமிக்கப்பட்டார். அதன் பின், திமுக ஆட்சியில் 2010-ம் ஆண்டு மாலதி தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இந்த இருவரைத் தொடர்ந்து, மூன்றாவது பெண் தலைமைச் செயலாளர் என்ற பெருமையை ஷீலா பாலகிருஷ்ணன் பெற்றுள்ளார்.

Dec 29, 2012
More News

Post Your Comments
Name*  
City  
Country  
Email*  
Comments*  
Security Code*
   
     
 
Comments
 
 
More தமிழ் News
 
 
 
Top Stories
 
Photo Gallery
 
Videos

Trailer of Neethane En Ponvasantham

Trailer of 'Nanban'