தமிழ் News

தமிழக பா.ஜ.க. தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் தேர்வு

சென்னை, டிசம்பர் 29: தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் இரண்டாவது முறையாக மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பா.ஜ.க. மாநில தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த 2009-ம் ஆண்டு முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் நிர்வாகிகளின் பதவிக்காலம் மூன்றாண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி மாநிலம் முழுவதும் கிளை, மண்டல, மாவட்டத் தலைவர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக மாநிலத் தலைவர், தேசிய பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் பூந்தமல்லி ராணி மகாலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தொடக்கத்தில் மாநிலச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட முன்னாள் தலைவர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் வரவேற்றார்.

மாநில அமைப்புச் செயலர் எஸ்.மோகன்ராஜுலு கட்சி செயல்பாடுகள் குறித்து விவரித்தார். தேசிய செயலாளர் பி.முரளிதர் ராவ் சிறப்புரை ஆற்றினார்.

பின்னர் தேர்தல் நடைபெற்றது. பொன். ராதாகிருஷ்ணன் சார்பில் 127 உறுப்பினர்கள் 12 மனுக்களை தாக்கல் செய்தனர். பிற்பகல் மாநில பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத் தலைவர் ஜே.லோகநாதன் வரவேற்றார்.

மத்திய தேர்தல் பார்வையாளர் பண்டாரு தத்தாத்ரேயா, எம்.எஸ்.ராமலிங்கம் ஆகியோர் தேர்தலை நடத்தினர். மாநிலத் தலைவர் பதவிக்கு பொன். ராதாகிருஷ்ணன் தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் அவர் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இதே போல், 39 நாடாளுமன்ற தொகுதிகள் சார்பில் 39 தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

முன்னாள் மாநில தலைவர்கள் கே.என்.லட்சுமணன், இல.கணேசன், சிபி.ராதாகிருஷ்ணன், மாநிலத் துணைத் தலைவர் எச்.ராஜா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

கூட்டத்தில்,

"குஜராத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக பதவி ஏற்றுள்ள நரேந்திரமோடிக்கும், பொதுமக்களுக்கும் பாராட்டு தெரிவிக்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டதால் விவசாயிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகம் முழுவதும் நஞ்சைக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம், புஞ்சைக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரமும் இழப்பீடாக அரசு வழங்க வேண்டும். விவசாயப் பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏழை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும்" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Dec 29, 2012
More News

Post Your Comments
Name*  
City  
Country  
Email*  
Comments*  
Security Code*
   
     
 
Comments
 
 
More தமிழ் News
 
 
 
Top Stories
 
Photo Gallery
 
Videos

Trailer of Neethane En Ponvasantham

Trailer of 'Nanban'