Features

காதலின் வலிமை

பகலும் இருளும் கலந்த மாலை வேளை தென்றல் காற்று இதமாக வீசுகிறது. நேரம் 6 மணி 30 நிமிடங்கள். எதிரே தெரிந்த அர்த்தநாரீசுவரர் கோயிலின் கோபுரத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்படியே மெய்மறந்து தன் கடந்தகால வாழ்க்கையை அசைபோட ஆரம்பித்தாள்.

உமா ஒரு தேசிய வங்கியில் உதவியாளராக பணியாற்றுகிறாள். அழகான இருபத்தைந்து வயதுடைய இளம் பெண். மாநிறம். பெரிய, கரிய விழிகள்.

பள்ளிப் படிப்பிற்குப் பின் தட்டெழுத்து, சுருக்கெழுத்து இரண்டிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவள். விளையாட்டு, பாட்டு, பேச்சு போன்ற எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்குபவள். அலுவலகப் போட்டியிலும் பங்கேற்று பல பரிசுகளைப் பெற்றவள். எப்போதும் சிரித்த முகத்துடன் இனிமையாகப் பேசுவாள். அனைவரும் விரும்பி பாராட்டும்படி நடந்து கொள்வாள். மேலதிகாரிகளிடமும் பணிவாகவும், மரியாதையாகவும் நடந்துகொள்வள். சக ஊழியர்களோடு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு அன்பாக செயலாற்றி வருபவள்.

ஓராண்டு காலம் சென்றது. அதே வங்கியில் கபூர் என்ற புதிய மேலாளர் பணியில் சேர்ந்தார். முப்பது வயதுடைய இளைஞர். மும்பையைச் சேர்ந்தவர். நல்ல சிவந்த நிறம். ஆறு அடி இரண்டு அங்குல உயரம். உயரத்திற்கேற்ற உடல்வாகு. தீர்க்கமான மூக்கு. கூரிய கண்கள். பதவிக்கேற்ற புத்திசாலித்தனம் உடையவர். கண்டோரை ஈர்க்கும் சக்தி உடையவர். எம்.பி.ஏ. படித்தவர். மொத்தத்தில் ஓர் ஆணழகர். தன்னுடன் பணியாற்றுபவர்களிடம் அன்புடனும் மரியாதையுடனும் பழகுபவர். ஆனால் வேலையில் கண்டிப்பும் கறாரும் உடையவர். கடமை உணர்ச்சி தவறாது நடந்து கொள்வார். சேர்ந்த ஒரு மாதத்திலேயே எல்லோருக்கும் அவரை மிகவும் பிடித்திருந்தது. அந்த வங்கியில் பதினாறு பேர்கள் வேலை செய்தனர்.

கபூர் பணியில் சேர்ந்த அன்று பிற்பகல் ஒரு கடிதம் டைப் செய்வதற்காக உமாவை அழைப்பதாக பியூன் கூறினார். உமாவும் நோட்டு பென்சில் சகிதமாக சென்றாள். மேலாளர் அறைக் கதவை மரியாதையாக தட்டிவிட்டு உள்ளே வரலாமா சார் என்று கேட்க, அவரும் வரும்படி கூறினார்.

உள்ளே சென்ற உமாவைப் பார்த்ததும் கபூர் எழுந்து நின்றுவிட்டார். தன்னை மின்சாரம் தாக்கியது போன்ற உணர்ச்சியில் இருந்தார். வைத்த கண் அசையாமல் உமாவைப் பார்த்தபடியே இருந்தார். தன் நிலை, இடம் எல்லாவற்றையும் மறந்தார். உமாவுக்கோ ஒன்றும் புரியவில்லை. சற்று குரலை உயர்த்தி "சார்" என்றதும் கபூர் தன்னை உலுக்கிக் கொண்டு சுயநினைவுக்கு வந்தார். உடனே மன்னிக்கவும், "என்ன கூறினீர்கள்" என்று கேட்டார். அதிர்ச்சி அடைந்தாற் போல் இருந்தீர்கள். என்ன காரணம்? தெரிந்து கொள்ளலாமா? என்று இனிமையாகக் கேட்டாள்.

கபூர் நேரம் வரும்போது கூறுகிறேன் என்றார். பிறகு கடிதத்திற்கான செய்தியைக் கூற, உமாவும் எழுதிக் கொண்டு சென்றுவிட்டாள். மாலையில் வீடு திரும்பும்போது, தன்னுடன் பணியாற்றும் தோழி மலரிடம் பிற்பகல் நடந்ததைக் கூறினாள். மலரும் அவர் வாழ்க்கையில் ஏதேனும் இருக்க வேண்டும்.

அந்த நினைவு உன்னைப் பார்த்ததும் ஏற்பட்டிருக்கலாம். காலப் போக்கில் தெரிய வரும், என்று கூறினாள். இருவரும் பக்கத்து பக்கத்து வீட்டில் இருப்பவர்கள். இணைபிரியா தோழிகள். அலுவலகத்தில் அவர்களை அன்பாக 'இரட்டையர்கள்' என்றும் கூறுவர்.

கபூருக்கு உமாவைப் பார்த்த நாள் முதல் அவள் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அவளது ஒவ்வொரு செயலையும் அவளுக்குத் தெரியாமல் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார். அவளது கூர்மையான அறிவு, இனிமையாகப் பழகுவது, எளிதில் செயலை முடிக்கும் திறன், நடை, உடை, பாவனை எல்லாமே அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. நாளாக நாளாக அவள் மீது கொண்ட அன்பு காதலாக மலர்ந்து வளரத் தொடங்கியது.

கபூர் திருமணமாகாதவர். நல்ல குணவான். ஆழ்ந்த அறிவாற்றல் உடையவர். எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாதவர். இரக்கக் குணம் உடையவர். ஏழை எளியவர்களுக்கு உதவுபவர். இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வார். அவரது வீட்டில் அவர்தான் கடைசிப் பிள்ளை. மற்றவர்கள் திருணமாகி நன்றாக இருப்பதாகவும், பெற்றோர் முதல் மகனுடன் இருப்பதாகவும் பியூன் மூலம் அலுவலக பணியாளர்களுக்குத் தெரிய வந்தது.

ஒரு நாள் சில முக்கிய அவசர கடிதங்கள் டைப் செய்ய வேண்டியிருந்ததால் மாலை ஆறு மணிக்கு மேல் வேலை செய்ய வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. உமா டைப் செய்து கொண்டிருந்தாள். தோழி மலரும் அடுத்த அறையில் அவளுக்காகக் காத்திருந்தாள். இரண்டு பேரும் வீட்டிற்குத் தொலைபேசி மூலம் தாமதமாக வரும் செய்தியை தெரிவித்தனர்.

டைப் செய்த கடிதங்களை சரிபார்த்தாள். அடுக்கி எடுத்துக்கொண்டு கபூர் அவர்களிடம் கொடுத்தாள். பெற்றுக்கொண்டு சரிபார்த்து கையெழுத்திட்ட கபூர் உமாவை ஒரு நிமிடம் அமரச் சொன்னார். உமாவும் உட்கார்ந்தாள். கடிகாரத்தைப் பார்த்தாள். இரவு 8.30 மணி. உடனே கபூர் கவலை வேண்டாம்.

உங்களிருவரையும் அலுவலக வண்டியில் கொண்டு போய் விடச் சொல்லியிருக்கிறேன் என்றார். அவரது கண்ணியமான பேச்சும், மலர் இருப்பது எப்படி இவருக்குத் தெரியும் என்ற ஆச்சரியமும் சேர்ந்து உமா குழம்பியிருந்தாள்.

கபூர் உமாவிடம் தயங்கியவாறே அன்று உங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததற்காக காரணம் கேட்டீர்களே, கூறுகிறேன். இதுநாள் வரை என் கனவில் தோன்றி மனதில் பதிந்துள்ள பெண் போல அப்படியே இருக்கிறீர்கள். அதனால் உங்களைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தேன். உங்களைக் கண்காணித்தேன். திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். உங்களுடைய விருப்பத்தை அறிய ஆவலாக உள்ளேன் எனக் கூறிவிட்டார். உமாவிற்கு வியர்த்துவிட்டது. கைகள் நடுங்க ஆரம்பித்தன. இருப்பினும் சமாளித்துக்கொண்டு, ஒன்றுமே கூறாமல் வந்துவிட்டாள்.

வெளியே வந்ததும் தோழி மலரிடம் நடந்தைக் கூறினாள். உமா பயத்துடனும், அதிர்ச்சியுடனும் காணப்பட்டாள். மலர் அவளை சமாதானப்படுத்தி கபூரைப் போன்ற ஓர் உயர்ந்த மனிதரை காண்பது அரிது. உனக்கு அவர் கிடைத்தால் பெரிய அதிர்ஷ்டம்தான். கவலைப்படாதே என தையரிமூட்டினாள்.

உமா வீட்டில் அவள் கடைசிப் பெண். அவளுக்கு முன்னால் இரண்டு அண்ணன்கள், நான்கு அக்காக்கள். இரண்டு அண்ணன்கள் ஒரு அக்காவிற்கு திருமணம் முடீந்து நன்றாக இருக்கின்றாள். வெளியூர்களில் உள்ளனர். மூன்று அக்காக்கள் திருமணத்திற்கு இருக்கின்றனர். எப்படி வீட்டில் கூறமுடியும்.

மேலும் அவளது அப்பா மிகவும் கண்டிப்பானவர். குலம், கோத்திரம், ஜாதகம் முதலியவற்றில் தீவிரமான நம்பிக்கை உடையவர். உமா மலரிடம் 'முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவது' சரியா என்றாள். இருப்பினும் கபூர் மீது கொஞ்சம் கொஞ்சமாக ஈடுபாடு தோன்றலாயிற்று. இதுதான் காதலா? எந்த நிலையிலும் இருவரும் எல்லை மீறியது கிடையாது. வதந்திகள் ஏற்படும் வகையில் நடந்துகொண்டதும் இல்லை.

ஒருநாள் மலர் உமாவின் பெற்றோரிடம் கபூர் பற்றி கூறி, அவர் உமாவை விரும்புவதையும் கூறினாள். உமாவின் தந்தை கோபத்தின் உச்சிக்குச் சென்றுவிட்டார். ”வன் குலம் என்ன? கோத்திரம் என்ன? நம்ம குலம் எப்படிப்பட்டது தெரியுமா? கண்டவனெல்லாம் எனக்கு மாப்பிள்ளையாகி விட முடியுமா? இந்தக் காதல் கத்திரிக்காய் எல்லாம் எனக்குப் பிடிக்காது. மேலும் எனக்கு இன்னும் மூன்று பெண்கள் உள்ளனர். அவர்கள் திருமணம் முடிந்த பிறகுதான் உமா கல்யாணம் பற்றி சிந்திக்க முடியும்,” என்று கூறி, உமாவையும் கூப்பிட்டு, இந்த மாதிரி எண்ணத்தை வளர்த்துக் கொள்ளாதே, எனக்கு குடும்ப மானம் தான் பெரிது. என் உயிர் இருக்கும்வரை சம்மதிக்கமாட்டேன். இனி நீ இங்கு வேலை பார்க்க வேண்டாம். மாற்றலுக்கு ஏற்பாடு செய்கிறேன், என்று அழுத்தமாகக் கூறிவிட்டார். சொல்லியபடியே இரண்டு நாளில் வேறு கிளைக்கு மாற்றல் உத்தரவும் வாங்கிவிட்டார்.

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை உணர்ந்த உமாவும் புதிய கிளையில் சென்று பணியில் சேர்ந்தாள். அவளால் கபூரை மறக்க முடியவில்லை. மலர் மூலம் நடந்தவற்றை அறிந்த கபூர் மிகவும் வேதனைப்ட்டார். சரியாக இரண்டு மாதத்தில் கபூரும் உமா வேலை செய்யும் வங்கிக்கே மாற்றல் வாங்கி சென்றுவிட்டார். இவர்களது காதல், நண்பர்கள் வட்டாரத்தில் தெரியவந்தது.

நண்பர்களும் இவர்களை எப்படியாவது இணைத்து வைக்கவேண்டும் என விரும்பினர். அதற்கான வேலைகளிலும் மூம்முரமாக ஈடுபட்டனர். ஆனால் கபூரும் உமாவும் பெற்றோர் சம்மதத்துடன்தான் எங்கள் திருமணம் நடைபெற வேண்டும் என கூறிவிட்டனர். அவர்கள் காதல் பிறைச் சந்திரன் போல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே வந்தது.

எந்த நிலையிலும் இருவரும் வரம்பு மீறியது கிடையாது. மீண்டும இருவரும் ஓரே கிளையில் வேலை பார்ப்பதை அறிந்த உமாவின் தந்தை மிகவும் கோபமடைந்தார். மறுபடி உமாவிற்கு மாற்றல் வாங்கினார்.

ஒரே மாதத்தில் கபூரும் மாற்றல் வாங்கி அங்குசென்று விடுவார். இதுபோல் எட்டு கிளை வங்கிக்கு இருவரும் மாறி சென்றுவிட்டனர். மேலிடத்தில் இவர்களது உண்மைக் காதல் பற்றி, நண்பர்களால் தெரிவிக்கப்பட்டது. இனி இவர்களுக்கு மாற்றல் கொடுப்பதில்லை என மேலிடம் முடிவு செய்து

ஆதரவும் அளித்தது. உமாவின் தந்தையால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கோபமும் ஆத்திரமும்தான் அதிகரித்தது. உமா தர்ம சங்கட நிலையில் தினமும் கடவுளை வேண்டுவாள். வீட்டில் தந்தையைத் தவிர அனைவருக்கும் கபூரை மிகவும் பிடித்திருந்தது. அவர்களால் ஒன்றும் பேசமுடியாது.

இதற்கிடையில் இரண்டாவது அக்காவின் திருமணம் நடந்து முடிந்தது. நாட்கள் மாதங்களாகி வருடம் ஒன்றாகிவிட்டது. ஒருநாள் உமாவின் தந்தைக்குத் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

உமாவும் அம்மாவும் அருகிலேயே இருந்தனர். செய்தியறிந்து கபூர் மருத்துவ மனைக்குச்சென்று பெரிய டாக்டரைப் பார்த்து, சிறப்பாக வைத்தியம் செய்யும்படி கூறி வேண்டிய ஏற்பாடுகளையும் உடனுக்குடன் செய்து அருகில் இருந்து பார்த்துக் கொண்டார். வெளியூரிலிருந்து ஒருநாள் கழித்துதான் அண்ணன்கள் வர முடிந்தது. கபூருக்கு மிகவும் நன்றி கூறினார்கள். தந்தையால் பேசமுடியவில்லை.

ஒருவாரம் சென்றது. நாள்தோறும் மாலையில் அலுவலக வேலை முடிந்ததும் கபூர் மருத்துவமனைக்குச் சென்று தந்தையைப் பார்த்து உடல் நலம் விசாரித்து விட்டு வருவார். அவரும் கோபத்தை மறந்து பேசுவார். ஆனால் திருமணம் பற்றி மட்டும் பேசமாட்டார். வீட்டிலுள்ளோர் கபூரிடம் மிகவும் மரியாதையுடனும், அன்பாகவும் பேசுவார்கள். தந்தைக்குத் திடீரென்று மறுபடி நெஞ்சுவலி வ்ந்து அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை செய்தனர்.

வீட்டிலுள்ள அனைவரும் மருத்துவமனையில் கூடிவிட்டனர். கபூரும் பார்க்க சென்றார். டாக்டர் பன்னிரன்டு மணி நேரம் கெடு வைத்துவிட்டார். குடும்பத்தினர் அழுத வண்ணம் சோகத்துடன் காணப்பட்டனர். அப்போது உமாவின் தந்தை கபூரை அருகில் அழைத்து கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டார். அவரும் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டார். அவரிடம் உங்களுக்கு ஒன்றுமில்லை. சரியாகிவிடும் என ஆறுதல் கூறி கண்ணீரைத் துடைத்தார். அவர் அப்போது தன் மனைவி, மகன்களைப் பார்த்து, உமாவையும் பார்த்தார். அப்படியே தலை சாய்ந்து விட்டது. டாக்டர்கள் முயற்சித்தும் பயனில்லை. உயிர் பிரிந்துவிட்டது. இந்த நிகழ்ச்சி கபூரை மிகவும் பாதித்துவிட்டது. காரியங்கள் நடந்தன.

ஒருமாதத்திற்குப் பிறகு உமா மீண்டும் பணியில் சேர்ந்தாள். அலுவலகத்தில் அனைவரும் ஆறுதல் சொன்னார்கள். கபூர் மிகவும் ஆதரவாக இருந்தார்.

ஒருநாள் உமா வேலைக்குச் செல்லும் போது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்து அறுவை சிகிச்சை நடைபெற்றது. பிறது கொஞ்சம் கொஞ்சமாக தேறிவந்தாள். நாள்தோறும் கபூரும் வீட்டிலுள்ளவர்களும், நண்பர்களும் வந்து ஆறுதலாகப் பேசி செல்வார்கள். மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வருவதற்குமுன் டாக்டர் உமாவின் அம்மாவிடம் அவளுக்குச் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை பற்றி கூறினார்.

விபத்தில் அவளுடைய கற்பப்பை சிதைந்துவிட்டதால் எடுத்துவிட்டதாகவும், குழந்தை பேறுக்கு லாயக்கில்லை என்பதையும் சொல்லி. பக்குவமாக அவளுக்குச் சொல்ல வேண்டும் என்றும் கூறினார். அம்மாவிற்கு தலையில் இடிவிழுந்தது போல ஆகிவிட்டது. சமாளித்துக் கொண்டு மெதுவாக அவளிடம் டாக்டர் கூறியதை சொல்லி அழுதார். பிறகு ஆறுதல் கூறி சமாதானம் செய்தார். கடவுளுக்கே என் திருமண வாழ்வில் விருப்பம் இல்லை போலும் என்று அழுதபடி இருந்தாள்.

உமா ஒரு முடிவுக்கு வந்தாள். கபூரின் வாழ்க்கையை வீணாக்கக் கூடாது என்று நினைத்து அவர் பார்க்க வரும் போதெல்லாம் தூங்குவதுபோல் இருந்தாள். அவருக்கு ஐயம் ஏற்பட்டது. டாக்டரிடம் சென்று விசாரித்தார். உண்மை தெரிந்தது. ஆனால் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை.

மூன்று மாதங்களுக்குப் பிறகு உமா மாற்றல் கேட்டு வேறு ஊருக்குச் செல்ல விரும்புவதாக கூறினாள். மேலதிகாரிகள் யோசித்து முடிவு எடு என்று சொல்லியும், அவள் பிடிவாதமாக மனமாற்றத்திற்காக அவசியம் மாற்றம் தேவை என கூறிவிட்டாள். எல்லோரும் விபத்தில் பயந்துவிட்டதாக நினைத்துக் கொண்டனர்.

ஒரு மாதத்திற்குப்பிறகு கபூரும் அங்கேயே பதவி உயர்வு பெற்று சென்றார். உமா முன்பு போல் இல்லை. மிகவும் மாறிவிட்டாள். இதையறிந்த உமா வீட்டவர் கபூரை அழைத்து, அவளுக்கு ஏற்பட்ட அறுவை சிகிச்சைபற்றி கூறி அவளை மறந்து விடுங்கள். வேறு பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள் என விம்மலுடன் கூறினர். கபூர் சிறிதுகூட அதிர்ச்சியடையவில்லை. எனக்கு முன்பே எல்லாம் தெரியும். திருமணத்திற்குப் பிறகு இவ்வாறு ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்? தவிர, நான் மனதார விரும்புவது உமாவைத்தான். அவள்தான் என் மனைவி. எனக்கு குழந்தை இல்லாவிட்டால் பரவாயில்லை, என்று உறுதியாகக் கூறிவிட்டார்.

உமா வீட்டில் எல்லோரும் ஆலோசனை நடத்தினர். தந்தை இறக்கும்போது கபூர் கைகளைப் பிடித்துக்கொண்டு, கண்ணீருடன் நம்மைப் பார்த்தது இவர்களின் திருமணத்திற்கு சம்மதம் அளித்துவிட்டார் என்று நம்புகிறேன் என்றார் அம்மா, கபூரை மாப்பிள்ளையாக ஏற்றுக்கொண்டுவிட்டார் என்றார் அண்ணன், கபூரும் எட்டு வருடங்களாக, உறுதியாக இருக்கிறார். விபத்திற்குப் பிறகும் காதலிக்கிறார். ஆகவே திருமணம் முடித்துவிடுவோம் என்று அம்மா கூற எல்லோரும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டனர்.

நல்ல நாளில் உமா கபூர் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இந்த மணத்திற்குப் பிறகு ஒரு சகோதரிக்குத் திருமணம் நடந்தது. உமா-கபூர் தம்பதியர் முன்னின்று நடத்தினர். ஒரு சகோதரி திருமணம் வேண்டாம் என கூறிவிட்டார். அண்ணன்கள் ஊர் ஊராக மாற்றலாகிப் போவதால் பிள்ளைகளின் படிப்பு பாதிக்காமல் இந்த சகோதரியும் அம்மாவும் பார்த்துக் கொள்கிறார்கள். உமாவும் கபூரும் வாரந்தோறும் சனிக்கிழமை மாலை வந்து ஞாயிறு இரவு செல்வார்கள். குழந்தைகளுடனும் அம்மா சகோதரியுடன் மகிழ்ச்சியாக இருந்து, அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வருகின்றனர்.

"உமா உமா," என்று கபூர் அழைத்துக் கொண்டு வருவதைக் கேட்டு சுய உணர்வு பெற்ற உமா "இதோ வருகிறேன்," என்று குரல் கொடுத்துக் கொண்டே கீழே இறங்கினாள்.

சிறு சிறு சண்டைகள், பூசல்கள், கருத்து வேறுபாடுகள் என எதற்கெடுத்தாலும் விவாகரத்து என்று உரிமை கோரும் இந்நாளில் ஜாதி, மதம், குலம், கோத்திரம் அனைத்திற்கும் அப்பாற்பட்ட உமா-கபூரின் காதல் வலிமை இளைய சந்ததியினருக்கு ஒரு முன்னோடியாகத் திகழட்டும்.

More Features

கீழையூர் Dr R. கமலா

 
More Features
 
 
 
Photo Gallery
 
Videos

Trailer of Neethane En Ponvasantham

Trailer of 'Nanban'