News

சங்கீதம் - II

சங்கீதம் - II

    ஆதி மனிதன் கற்களை உரசி நெருப்பை மட்டும் கண்டுபிடிக்கவில்லை. கற்கள் உரசும் போது கேட்ட பலவித ஒலிகளையும் ரசித்து பின்னரே தோல், நார், நரம்பு உலோகங்கள் அதன் இழைகள் மூங்கில் என வளர்ந்து நாதஸ்வரம், மத்தளம், டிரம்ஸ், சாக்ஸபோன் என பற்பல இசைக்கருவிகளும், சிறிதும் பெரிதுமாக வளர்ந்துள்ளன.

     அனைத்தும் இசையின் வடிவம் அனைத்திலும் மக்களை ஈர்த்து மனதை மயக்கும் ஒலி !

     இசை நம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் அவரவர் மொழியில், வாழ்வுக்கு சந்தோஷமான, மங்கல இசையும், இறப்பிற்கு வருத்தமான சோக கீதமும் உண்டு.

     பிறப்பிற்கு, தாலாட்டும், இறப்பிற்கு ஒப்பாரியும், உள்ளதல்லவா..? இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்,...!

     வாய்பாட்டுகள் மட்டுமின்றி, நாதஸ்வரம், மிருதங்கம், வயலின், மாண்டலின் இவைகளின் தனி ஆவர்த்தனங்கள், கச்சேரிகளில் எவ்வளவு அழகிய இனிமையான சங்கீதங்கள்..?

     வேகமான ’தில்லானா’  அழகு இனிமை மட்டுமின்றி அதன் வேகமும் மனதை மயக்கும் சங்கீதம்.

     இனிமையான சங்கீதம் ஒரு ’விருந்து பல ராகங்களும் இணைந்து மனதை நிரப்புவதால்...!

     இதே சங்கீதம் மருந்தும் ஆகும். வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நோயுற்றவர்களுக்கும் இது மருந்தாகும்.

     கோவிலில் கேட்கும் இசை கலந்த அர்ச்சனைகளும் - சஹஸ்ர நாமங்களும் அருள் கூட்டும் இசைகளும் ’அருளாகும்’.

     அக்பரின் அரசவை பாடகர் தான்சேனின் பாடலால் அரண்மனைத் தீபங்கள் ஒளிர்ந்தன என்கிறது சரித்திரம்.

     பாடலுக்கும் - சங்கீதத்திற்கும் எக்காலத்திலும், ஜாதி மத பேதமே இல்லை.

     நாலாயிர திவ்யப் ப்ரபந்தங்கள் பாடிய பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருப்பாணாழ்வார் தீண்டத் தகாதவராக எல்லோராலும் ஒதுக்கப்பட்டார். ஆனால் அவர், அரங்கனைத் தன் மனதில் இருத்தி - யாழை மீட்டியபடியே தினமும்அரங்கனைப் பாடி வந்தார்.

     ஒருநாள் ஸ்ரீரங்கநாதருக்கு திருமஞ்சன தீர்த்தம் எடுத்துவர, லோகசாரங்கர் காவிரி சென்றபோது இவரை விலகச் சொன்னார். ஆனால் நம் பெருமானிடம் மனம் லயித்திருந்த, அம்மஹானின் காதில் விழவில்லை.

     அதனால் கோபம் கொண்ட லோகசாரங்க முனிவர் பாணர்மீது கல்லை வீசி எறிந்தார்.

     அன்றிரவு லோகசாரங்கரின் கனவில், ஸ்ரீரங்கநாதர் காயம் பட்டவராய் காட்சியளித்து பாணனை தமது சன்னிதிக்கு தோளில் தூக்கி வரப் பணித்தார் பின்னர் பாணரை தம்முடன் ஐக்யமாக்கிக் கொண்டார் ஸ்ரீரங்கன்.

     நம்நாட்டு கர்நாடக சங்கீதம் என்னும் போது                   எம்.எஸ். சுப்புலக்ஷ்மி மிகவும் முக்கியமானவர். அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் சபையில் மஹான் ராஜாஜி , சங்கராசார்யார்களின் பாடலைப் பாடியதும், மற்றும் அவரது ’காற்றினிலே வரும் கீதமும்’ மறக்க முடியாதவை.

     தவிர அவரது அருள் மிகுந்த விஷ்ணு சஹஸ்ரநாமம், உலகெங்கும் எவ்வளவு வீடுகளிலும், கோவிலிலும் ஒலிக்கிறது.

     அவரது சமகாலத்தவர்கள் எம்.எல். வசந்தகுமாரியும், என்.ஸி.வசந்த கோகிலமும்.

     ஒவ்வொரு மார்கழியிலும் இளங்காலைப் பொழுதில் ஒலிக்கும் வசந்தகுமாரியின் திருப்பாவையை கேட்டு பக்திப் பரவசத்தில் மகிழாதவர்களும் உண்டோ?

     என்.ஸி வஸந்த கோகிலத்தின் குயில் போன்ற குரலில் எத்துணை கீர்த்தனங்கள்?

     அயல் நாடுகள், இந்தியாவெங்கும் என எல்லா இடங்களிலும் பாடியவர்கள் அதுவும் அந்தக் காலத்தில் அதிலும் ’பெண்கள்’ இவர்களாக மட்டுமே இருந்திருக்க முடியும் !

     மகாகவி பாரதிக்கு இசையில் மிகுந்த ஆர்வமும், அலாதி ரசனையும் ஆர்வமும் உண்டு. அவர் சுமார் இருப்பத்து எட்டுக்கும் மேற்பட்ட ராகங்களில் பாடியுள்ளார்.

     இந்திய விடுதலைச் சுதந்திரம் கனவாக இருந்தபோது, பாரதியின் வீரமிகு எழுச்சிப் பாடல்களை தனது கணீர்க் குரலில் பாடி மக்களைத் தட்டி எழுப்பியவர் டி.கே. பட்டம்மாள்.

                    -ரேவதி-                           -தொடரும்

More News

 
More News
 
 
 
Photo Gallery
 
Videos

Trailer of Neethane En Ponvasantham

Trailer of 'Nanban'